பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸுடன் இஸ்ரேல் பேரம் பேசி வருவதாகத் தகவல்

13-11-2023

0

17

இஸ்ரேல் - ஹமாஸ் போர் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடிக்கும் நிலையில் பணயக் கைதிகளை விடுவிக்குமாறு ஹமாஸுடன் இஸ்ரேல் பேரம் பேசி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, என்பிசி செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், "ஹமாஸ் குழுவினர் பணயக் கைதிகளை விடுவிக்க ஏதுவாக அவர்களுடன் சில ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்படலாம். ஆனால் அது என்ன மாதிரியான ஒப்பந்தம் என்பதை இப்போதைக்கு வெளிப்படுத்த முடியாது. அது திட்டத்தையே சிதைத்துவிடும். அதைப் பற்றி அதிகம் விவரம் தெரிவிக்காமல் இருப்பதே அது நிறைவேறுவதற்கான சாத்தியக் கூறை அதிகரிக்கும்" என்றார். அவருடைய இந்த சூசகப் பேச்சு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த ஒக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை 11,078 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலில் சுமார் 1,400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தும் 200 பேர் வரையில் பணயக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டதாக கூறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில், இஸ்ரேல் உடனடியாக யுத்த நிறுத்தத்தை அறிவிக்கவேண்டும் என பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளது. காஸா மீதான தாக்குதல்கள் மற்று இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என சவுதி உள்ளிட்ட அரபு நாடுகள் வலியுறுத்தியுள்ளன. பாலத்தீனர்களுக்கு எதிரான தாக்குதலை தன்னை தற்காத்துக் கொள்வதற்கான நடவடிக்கை என இஸ்ரேல் கூறி வருவதை நிராகரிப்பதாகவும் அரபு நாடுகள் தெரிவித்துள்ளன.

 

அதே நேரம் இஸ்ரேல் உடனடியாக யுத்த நிறுத்தத்தை அறிவிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தென்னாசிய நாடுகளின் பல்கலைகழக மாணவர்கள் சங்கங்கள், எதிர்ப்பதற்கும் சுதந்திரமாகயிருப்பதற்கும் தங்கள் பகுதிகளுக்கு திரும்புவதற்கும்  பாலஸ்தீனியர்களுக்கு உள்ள உரிமையை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளன.

 

இலங்கை இந்தியா உள்ளிட்ட தென்னாசியநாடுகளை சேர்ந்த பல்கலைகழகமாணவர் அமைப்புகள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பாசிச இஸ்ரேலிய அரசாங்கத்தையும் அவர்களின் சகாக்களையும் எதிர்க்க முன்வருமாறும் பாலஸ்தீனியர்களை பாதுகாக்க முன்வருமாறும் நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ள தென்னாசிய மாணவர் அமைப்புகள் பாலஸ்தீனிய மக்களிற்கு எதிரான சியோனிஸ்ட்களின் இனப்படுகொலையால் 12000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் காசாவில் நிலவரத்தை வெளிக்கொண்டுவரும்  பத்திரிகையாளர்களையும் அது இலக்குவைக்கின்றது என தெரிவித்துள்ளது.