புது தில்லியில் அனுரகுமார, யாழ்ப்பாணத்தில் தம்மன்னா

14-03-2024

0

0

சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற இரண்டு சம்பவங்கள் பற்றி தமிழ் ஊடகங்கள் அதிகம் கரிசனை  கொண்டிருந்ததனை அவதானிக்க முடிந்தது. முதலாவது, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) தலைவர் அனுரகுமார திசாநாயக்க இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் புதுதில்லிக்குச் சென்று, அங்கு வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் உட்பட சில முக்கிய பிரமுகர்களைச் சந்தித்தித்திருக்கிறார். மற்றையது, தென்னிந்திய திரைப்பட நடிகர்கள், பாடகர்கள் கலந்து கொண்ட பிரமாண்டமான களியாட்ட நிகழ்ச்சி ஒன்று பெப்பிரிவரி 9ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. குழப்பத்தில் முடிவடைந்த இந்நிகழ்ச்சியில் பஞ்சாபி நடிகை தமன்னா, பாடகர் கரிகரன் உட்பட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை வழங்கியிருந்தனர். மேலெழுந்தவாரியாகப் பார்த்தால்  இவைஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற விடயங்களாகத் தோன்றினாலும், இவ்விரு சம்பவங்களுக்கும் பின்னணியில் ஒரே தரப்பினர் இருந்திருக்கிறார்கள் எனக் கருத இடமுண்டு.

அரசியற் கட்சிகளுக்கு ஆலோசனை வழங்கும் பிரசாந் கிசோர் தெரிவித்திருக்கும் கருத்துகளை பார்ப்போம். 'இந்தியா ருடே' தொலைக்காட்சிக்கு அவர் வழங்கிய நீண்ட நேர்காணலில், வரும் தேர்தலில் மோதி என்கிற பிராண்ட் (brand) வெற்றி பெறும் எனவும், எதிர்க் கட்சிகளின் கூட்டான  'இண்டி கூட்டணி' தமக்குக் கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தவில்லை. தேர்தலை முன்வைத்து அண்மையில் அவசர அவசரமாக நடைபெற்ற இராமர் கோவில் ஆரம்ப விழா பாரதிய ஜனதாக் கட்சிக்கு வாக்குகளை அதிகரிக்க உதவுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த கிசோர், அவ்வாறு தான் எண்ணவில்லை எனவும், ஆனால் ஜம்மு காஸ்மீருக்கு சிறப்பு  அதிகாரங்களை வழங்கிய அரசியல் யாப்பின் 370 வது சரத்து நீக்கப்பட்டமை வாக்குகளை அதிகரிக்க உதவும் எனத் தெரிவித்திருந்தார். 1948ம் ஆண்டு  ஏப்ரல் மாதம் 21ம் திகதி ஐ.நா. பாதுகாப்புச் சபையின் 47வது தீர்மானத்திற்கு அமைய காஸ்மீர் இந்தியாவுடன் இணைந்திருப்பதா இல்லையா என காஸ்மீரி மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டிய கடப்பாட்டிலிருக்கும் இந்தியா, தம்முடன் ஒரு மாநிலமாக இணைத்து வைத்திருக்கும் காஷ்மீருக்கு தற்காலிகமாக வழங்கிய சிறப்புரிமைகளை நீக்கி அம்மாநிலத்தை மூன்றாகப் பிரித்திருக்கிறது. இது  இந்திய வாக்காளர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது என்ற செய்தியை நாம் அலட்சியம் செய்ய முடியாது.

இனி, அனுரகுமார விடயத்திற்கு வருவோம். இலங்கைத் தீவில் செயற்படும் அரசியற் கட்சிகளில் இந்திய எதிர்ப்பை அதன் அரசியற் கொள்கையாக வைத்திருந்த ஒரேயொரு கட்சி ஜேவிபி. 1971ம் ஆண்டு ஜேவிபி நடத்திய கிளர்ச்சிக்கு முன்பதாக அதன் உறுப்பினர்களுக்கு அரசியல் வகுப்புகளை நடத்தியது.  அத்தொடர் வகுப்புகளில் ஐந்தாவது வகுப்பு இந்தியாவின் விரிவாக்கல் நடவடிக்கையை எதிர்ப்பது பற்றியதாக அமைந்திருந்தது. இவ்விடயத்தில் தமிழர்களை நம்ப முடியாது எனவும் அவர்கள் இந்தியாவின் பக்கமே நிற்பார்கள் எனவும் அவ்வகுப்பில் போதிக்கப்பட்டது. ஜேவிபியின் 1971ம் ஆண்டுக் கிளரச்சியை அடக்குவதற்கு அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க, இந்திய உதவியை நாடியிருந்தார். இந்தியப் பிரதமராகவிருந்த இந்திரா காந்தி  அக்கோரிக்கைக்குச் சாதகமாக நடந்திருந்தார்.

ஜேவிபியின் இரண்டாவது கிளர்ச்சி (1987-89), முழுக்க முழுக்க இந்திய எதிர்ப்பினை மையப்படுத்தியிருந்தது. அப்போது அமைதிப்படை என்ற பெயரில் தமிழர் தாயகப் பகுதிகளை ஆக்கிரமித்திருந்த இந்தியப் படைகள் நிலை கொண்டமைக்கும், இந்திய - இலங்கை ஒப்பந்தத்திற்கும் எதிராக ஜேவிபி தீவிரமாகப் பரப்புரை செய்தது. தேசத்தில் அன்பு கொண்டவர்களை தங்களுடன் இணைந்து செயற்பாடுமாறு கூறிச்  சிங்கள இளைஞர்களை அணி சேர்த்தது. ஜேவிபியின் ஆயுதப் பிரிவு, தேசப் பிரேமி ஜனதா வியாபாரய (தேசத்தின் மீது அன்பு கொண்டவர்களின் மக்கள் இயக்கம்) என அழைக்கப்பட்டது.  இந்த இயக்கம் இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்து விற்பதற்குத் தடை விதித்தது. மீறியவர்களைச் சுட்டுக் கொன்றது. இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் பிரபலமாயிருந்த தமிழ் வர்த்தகர்களும் அடங்குவர். இவர்களின் அட்டகாசம் பொறுக்க முடியாமல் இலங்கை அரசாங்கத்தின் வர்த்தகத் திணைக்களம் பம்பாய் வெங்காயத்தின் பெயரை 'லங்கா பெரிய வெங்காயம்' என மாற்றியது. இவ்வாறு அவ்வியக்கம் இந்திய எதிர்ப்பைக் காட்டியிருந்தாலும், தமிழர் தாயகத்தில் நிலை கொண்டிருந்த இந்தியப் படைகள் மீது ஒரு தாக்குதலையேனும் நடத்த எத்தனிக்கவில்லை. 

ஜேவிபியின் இரண்டாவது கிளர்ச்சி முற்றாக முறியடிக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்ற அரசியலுக்கு வந்த ஜேவிபி, இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்படி வடக்கு - கிழக்கு மாகாணங்களின் தற்காலிக இணைப்புக்கு எதிராக நீதிமன்றம் சென்று நிரந்தரமாகப் பிரிப்பதற்கு வழி சமைத்தது. இவ்வாறு நீண்ட இந்திய எதிர்ப்புப் பின்னணியைக் கொண்ட ஜேவிபி இப்போது இந்தியாவுடன் உறவாட விழைவதேன்? 

வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவிருக்கும் அனுரகுமார தனக்கு வெற்றி வாய்ப்புகள் இருப்பதாக நம்புகிறார். இராஜபக்ச சகோதர்களுக்கு எதிரான 'அரகலய' போராட்ட காலத்தில் நகர்ப்புற மட்டத்தில் ஜேவிபிக்கு செல்வாக்கு அதிகரித்தாகத் தெரியவருகிறது.  எனினும், ஜனாதிபதித் தேர்தலில் வெல்லுமளவிற்கான செல்வாக்கினைக் அக்கட்சி கொண்டிருப்பதான அறிகுறிகள் தெரியவில்லை. அமெரிக்க உதவி நிறுவனமான USAID இன் நிதியுதவியில் இயங்கும் Institute of Health Policy (IHP) என்ற நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் 50 விழுகாட்டிற்கு அதிகமானவர்கள் அனுரகுமார ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவார் எனக் கூறியுள்ளதாகத் அறிவித்திருக்கிறது. Zee தொலைக்காட்சி குழுமத்தின் WION News போன்ற இந்திய ஊடகங்களும் இவ்விடயத்திற்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளன.  தான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இந்திய, மேற்கத்தைய அரசாங்கங்களின் ஆதரவு தேவை என்பதனை உணர்ந்துள்ள அனுகுமார இத்தரப்புகளுடன் நல்லுறவினைப் பெற விழைகிறார். சிறிலங்காவின் பொருளாதாரப் பின்னடைவை தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தி இலங்கைத் தீவைத்தன் செல்வாக்குக்குள் கொண்டு வர முயலும் இந்தியா ஜேவிபியின் இந்திய எதிர்ப்பை நடுநிலைப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளது.

இறுதியாக தமன்னா விடயத்திற்கு வருவோம். யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் இவ்வாறு ஆடை குறைப்புடனான நடனத்தை யாரும் வழங்கவில்லை என்பதிலிருந்தும், யாழ் வருகை கவனத்தைப் பெறுகிறது. ஒரு காலத்தில், கோவில் திருவிழாக்களில் சின்ன மேளங்களின் சதிராட்டத்தை காணத் துடித்த யாழ்ப்பாண மக்கள், தமன்னாவைப் பார்க்க முண்டியடித்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால் இவ்வாறு பாரியளவில் களியாட்ட நிகழ்ச்சிகளை நடத்த வேண்டிய தேவையாருக்கிருக்கிறது. இக்களியாட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ரம்பாவின் கணவர் எனத் தன்னை அழைத்துக் கொள்ளும் இந்திரகுமார் பத்மநாதன், இந்நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டு விற்பனையில் பெறப்பட்ட வருமானத்திற்கும் நிகழ்ச்சிக்கான செலவுத் தொகைக்கும் இடையில் மலைக்கும் மடுவுக்குமான இடைவெளி காணப்படுவதாகக் கூறியிருக்கிறார். 

யாழ்ப்பாணத்தில் அவர் அமைத்திருக்கும் தனியார் கல்வி நிறுவனத்தை விளம்பரப்படுத்துவதற்கான நிகழ்ச்சியாகவும் இதனைப்பார்க்க முடியாது. ஏனெனில் யாழ்ப்பாணத்தில் உயர்கல்வி நிறுவனம் ஒன்றை அமைத்து அதற்கு கோடிக் கணக்கில் செலவு செய்து விளம்பரப்படுத்துவது என்பது 'திருநெல்வேலிக்கே அல்வா கொடுத்தது' போன்ற விடயம் என்பதனை யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த இந்திரகுமார் நன்கு அறிவார்.

இந்நிகழ்ச்சியில் நடைபெற்ற குழப்பம் யாழ்ப்பாணத்தில் ஏற்படுத்தப்படவிருக்கும் முதலீடுகளைப் பாதிக்கும் என டக்ளஸ் தேவானந்தா கூறியிருக்கிறார். யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமானச் சேவை, காங்கேசன்துறை - தூத்துக்குடிக்கான கப்பற் சேவை ஆகியவை ஆரம்பிக்கப்பட்ட போதும் இவ்வாறு இந்திய முதலீடுகள் பற்றிப் பேசப்பட்டது. பயணிகள் இல்லாததால் கப்பற் சேவை நிறுத்தப்பட்டு விட்டது. விமான சேவையூடாக யாழ்ப்பாணத்திற்கு முதலீடுகள் வருவதாகத் தெரியவில்லை. யாழ்ப்பாணத்தில் அதிக வருமானங் கொண்ட கோவில்கள் உற்சவ காலத்தில் இவ்விமானச் சேவையூடாக தமிழ் நாட்டிலிருந்து பூக்களை இறக்குமதி செய்கின்றன. திரைப்பட நடிகர்கள், நடனக்காரர்கள், பாரதீய ஜனதாக் கட்சி அரசியல்வாதிகள் போன்றோர் வந்து போகிறார்கள்.  இவர்களைத் தவிர முதலீட்டாளர்களோ, கல்வியார்களோ, தொழிற்துறையினரோ வருவதாகத் தெரியவில்லை. 

அதே சமயத்தில், கடல் மார்க்கமாக கேரளக்கஞ்சா தங்கு தடையின்றி வருகிறது. இந்திய மீனவர்கள் கடல் வளத்தை அள்ளிச் செல்கிறார்கள். தமிழ் மக்களைப் போதையிலும், களியாட்டங்களிலும்  வைத்திருப்பதை யார் விரும்புகிறார்கள் என்பதையிட்டு நாம் சிந்திக்க வேண்டும்.