24 மணிநேரத்தில் 700 பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் படு கொலை

03-12-2023

0

54

காசாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் நடத்திவரும் கொடூரமான தாக்குதல்களில் 24 மணிநேரத்தில் 700 பாலஸ்தீனர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

அத்துடன்  இஸ்ரேல் இராணுவத்தினர் தாங்கிகள் மற்றும் ஆட்லறிகள் மூலமும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் மற்றும் காயமடைந்தவர்கள் உட்பட 300 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் ஷெஜாயா பகுதியில் இடிந்து விழுந்த கட்டடங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் யெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த மாதம் 7-ம் திகதி  இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை அடுத்து இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இஸ்ரேல் தரப்பில் 1,200 பேர் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக காசாவில் இருந்தனர். இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில் 15,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

 

கடந்த சில வாரங்களாக தொடர்ந்து நடந்து வந்த போர், கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தொடர் முயற்சி காரணமாக ஒரு வார காலத்துக்கு போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. இந்த ஒரு வார காலத்தில், இஸ்ரேல் தரப்பில் இருந்து கைதிகள் சிலர் விடுவிக்கப்பட, பதிலுக்கு ஹமாஸ் தன்னிடம் இருந்த பிணையக் கைதிகளில் பலரை விடுவித்தது.

 

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் தாக்குதலைத் தொடங்கியுள்ளது இஸ்ரேல்.

 

இந் நிலையில்,ஹமாஸ் தாக்குதல்களால்தான் போர் நிறுத்த நீட்டிப்பு தடைபட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. டுபாயில் COP28 மாநாட்டுக்கு வந்திருந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கன் கூறுகையில், ”வியாழக்கிழமை ஜெருசலேமில் ஒரு பேருந்து நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டால் தான் போர் நிறுத்த நீட்டிப்பு தடைபட்டுள்ளது. அந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். 8 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஹமாஸ் பொறுப்பேற்றது. வெள்ளிக்கிழமை இஸ்ரேல் எல்லையோர பகுதிகளைக் குறிவைத்து ஹமாஸ் 50ராக்கெட்டுகளை ஏவியது. இதனால் தான் போர் நிறுத்த நீட்டிப்பு தடைபட்டது” என்று குற்றம் சுமத்தியுள்ளார்.