ஞாபகம் வருதே...

22-03-2024

0

1

சித்திரைப் புத்தாண்டு

சித்திரைப் புதுவருடப் பிறப்பு தமிழ் புதுவருடப் பிறப்பு என்ற பெயரோடு

வழமையாகி விட்ட இந்து புதுவருடப் பிறப்பு புலம்பெயர் வாழ்விலும் வசதிக்கு ஏற்றபடி தொடரும் வருடப்பிறப்புக் கொண்டாட்டம். வாழ்த்துக்களைப் பரிமாறும் தொலைபேசி அழைப்புகள், சாமிப்பட தட்டில் இருந்து வரும் சாம்பிராணி வாசனை, பாணுக்கு பதிலாக காலை உணவாகும் பொங்கல்சாதம், வானொலி, தொலைக்காட்சியில் வரும் விசேட நிகழ்ச்சிகள், மலிவு விற்பனை விளம்பரங்கள், இவை இங்கு புதுவருடப் பிறப்பின் அடையாளங்கள். காலை முதல் இரவு வரை இந்துக் கோயில்கள் எல்லாமே புதுவருடதின வழிபாட்டுக்கு வந்து போகும் பக்தர்களால் நிறைந்திருக்கும். 

அந்த நாட்களில் ஊரில் சித்திரைப் புதுவருடக் கொண்டாட்டம் என்றால் நினைவுக்கு வருபவை கைவிசேடமும், நல்லநேரம் பார்த்து உறவினர் வீடு போவதும் போர்த்தேங்காய் அடியும், பலகாரங்களும் தான?

வெற்றிலையில் ஒற்றைவிழும் தொகையில் பணம் வைத்து, மஞ்சள் துண்டு, நெல்மணிகள்போட்ட, குங்குமம் தடவி அதை புதுவருடம் பிறந்து பஞ்சாங்கம் சொல்லும் நல்ல கைவிசேட நேரத்தில் சாமிப்படத்தின் முன் நின்று பயபக்தியாக பெற்றுக்கொள்வது கைவிசேடம். நட்சத்திர பலனின் படி அந்த ஆண்டு பலனில் விரயத்தை விட ஆதாயம் அதிகம் என குறிக்கப்படுபவரிடம் கைவிசேடம் வாங்குவது சிறப்பு என்ற நம்பிக்கை. உழைக்கும் உறவினர்கள் சிறுவர்களுக்கு கைவிசேடம் தருவதும் முதலாளி தொழிலாளர்களுக்கு கைவிசேடம் என்று பணம் தருவதும் மரபாகி ஊரில் இன்னும் தொடர்கிறது.

புதுவருடப் பிறப்புக்கு முன்பாகவே வீடுகளில் பலகாரச் சூடு ஆரம்பித்துவிடும். உறவினர்கள், நண்பர்கள் வரும்போது உபசரிக்க முறுக்கு. சீனிஅரியதரம், லட்டு, சிப்பி பணியாரம், பால்ரொட்டி, உழுத்தம்பணியாரம் என்று சிலநாட்கள் வைத்துப் பயன்படுத்தக் கூடிய பணியாரங்கள் சுட்டு. பழைய பேப்பரில் எண்ணை வடிய விட்டு. பால்மா,

வெற்று தகரப் பேணிகளில் காற்று பட்டு 'இளவாழிக்காமல்' போட்டு

வைப்பார்கள். அளவாக எடுத்து உறவினர் வரவர பரிமாறப்படும்.

இன்ன இன்ன நாள் நேரம் தான் விருந்து உண்ண ஏற்றது என்று பஞ்சாங்கமும், கலண்டரும் குறித்துக் காட்டும். அந்த நேரத்தில் போனால்தான் உபசரணை. அல்லது அந்த ஆண்டு முழுவதும் உறவுக்குள் சண்டை வந்துவிடும் என்று ஒரு நம்பிக்கை.

தாச்சிப்போட்டி என்ற கிளிக்கோடு மாட்டுவண்டிச் சவாரிப்போட்டி என்பனவும் ஆங்காங்கே இடம்பெறும். உதைபந்தாட்டம் கிரிக்கெட் என்ற சுற்றுப்போட்டிகளாக இவை காலமாற்றத்தில் மாறியதும் உண்டு. அரியாலை சனசமூக நிலையம் ஆண்டுதோறும் புதுவருட தினத்தில் ஆரம்பித்து தன் ஆண்டுவிழாவை மூன்று நாள் நிகழ்ச்சியாக நடத்தி வந்ததும் அந்தக்காலச் சிறப்புகளில் ஒன்று.

புதுவருடப் பலன் சொல்லுகின்ற பஞ்சாங்கங்களின் விற்பனை இந்நாட்களில் அமோகமாக இருக்கும். ஒரே நட்சத்திரத்தில் பிறந்த இலட்சக்கணக்கானவர்களுக்கு வருடபலன் இப்படித்தான் இருக்கும் என்று கணிப்புச் சொல்வதும். அதைப் பார்த்து 'என் தலையெழுத்து இந்த ஆண்டு இப்படித்தான் இருக்கும் என பெருவாரி சனம் நம்புவதும், அந்த

நம்பிக்கை இன்னும் இங்கும் கூட தொடர்வதும் வியப்புக்கு உரியது தான்.

நம்பிக்கையோடு நாம் கடைப்பிடித்துவரும் சமய சம்பிரதாயங்களை வளர்த்துவரும் எம் சந்ததிகளுக்கு அறிமுகப்படுத்துகிறோம். அவர்களும் அதை ஏற்று தொடரவேண்டும் என்பது எமது விருப்பம். இந்நிலையில் சிந்தித்து செயற்படும் ஆற்றலோடு வளரும் அவர்கள் ஏற்றுக்கொள்ளும்

வகையில் இவற்றை அவர்களுக்கு அறிமுகம் செய்வது அவசியமாகிறது.

அந்நிய ஆக்கிரமிப்புக்கு எமது தாயகம் உட்பட்ட நாள் முதல் எமது மொழி சமய அடையாளங்கள் அழிய ஆரம்பித்தன. ஆலயங்கள் தரைமட்டமாயின. ஆறுமுக நாவலர்கள் அவசியம் தேவையானார்கள். இன்று அந்நியதேச வாசத்தில் எமது இனமத அடையாளங்களை நாங்களே அழித்துக் கொண்டிருக்கிறோம். அர்த்தம் உள்ள இந்துமதம் என்று புதிய வேதவிளக்கம் தர, வேண்டியவற்றை நிலைநாட்ட, வேண்டாதவற்றை வெளியேற்ற யார் வரப்போகிறார்கள்?